லிங்கா 100.... ஆல்பர்ட் தியேட்டரில் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம் பாரு!
'லிங்கா' படத்தின் 100-வது நாள் விழா சென்னை ‘ஆல்பட்' தியேட்டரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுவந்ததால் அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டது. ‘லிங்கா' படம் கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் பிரமாண்டமாக ரிலீசானது. ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்தனர்.
இப்படம் தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் 3000 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. முதல் மூன்று நாட்களில் ரூ 108 கோடியைக் குவித்து புதிய சாதனைப் படைத்தது இந்தப் படம்.
ஆனால் படம் வெளியான மூன்றாம் நாளிலிருந்தே படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்தனர் சிலர். படத்தின் விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொண்டே இந்த பிரச்சாரத்தை செய்தனர் அவர்கள். இது படத்தின் ஓட்டத்தைப் பெரிதும் பாதித்தது.
ஆனாலும், சென்னையில் ‘லிங்கா' படம் சென்னை ஆல்பட், அபிராமி, தேவி போன்ற அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. ஆல்பர்ட் தியேட்டரில் 100-வது நாள் வெற்றி விழாவுக்கு நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டது.
தியேட்டர் முன் ரஜினி கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. தியேட்டரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரஜினி உருவம் பொறித்த கொடிகளையும் கையில் வைத்து இருந்தார்கள்.
பட்டாசுகள் வெடிக்கபபட்டன. இனிப்புகள் வழங்கப்பட்டன. சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க என கோஷங்களும் எழுப்பினார்கள். சைதை ரசிகர் மன்றம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் திரண்டு வந்து ஆரவாரமாய் கொண்டாடினர். பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.
‘லிங்கா' 100-வது நாள் விழாவையொட்டி ராகவா லாரன்சின் ஆதரவற்றோர் இல்லத்தில் சைதை ரவி தலைமையில் உணவு வழங்கப்பட்டது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மயிலை சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று ஆல்பர்ட் மெயின் அரங்கில் படம் திரையிடப்பட்டது. 100 வது நாள் என்பதால் திரையரங்கம் ஹவுஸ்புல்லாகிவிட்டது. படத்தை ஆரவாாரத்தோடு ரசித்து மகிழ்ந்தனர். ரஜினி படங்களின் முதல் நாள் முதல் காட்சிகளுக்கு எப்படி ரசிகர்கள் திரண்டு வந்து கொண்டாடுவார்களோ, அதே போல நேற்று லிங்கா 100வது நாள் விழாவைக் கொண்டாடினர் ரஜினி ரசிகர்கள்.

0 comments:
Post a Comment