Wednesday, March 25, 2015


விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது என்று அறிவிப்பு வந்ததும் நிறைய பேர் ஆச்சர்யத்தின் எல்லைக்குப் போய்விட்டார்கள். அவர் நடித்த படத்தைச் சொன்ன பிறகுதான், இந்தப் பெயரில் இன்னொரு நடிகர் இருப்பதைப் புரிந்து கொண்டார்கள். 

தேசிய விருது பெற்ற இந்த விஜய்யின் முழுப் பெயர் சஞ்சாரி விஜய். அடிப்படையில் நாடக நடிகர்.

கன்னடத் திரையுலகில் ஒரு நடிகராக அவர் அறிமுகமானது கடந்த ஆண்டுதான். அறிமுகமான முதல் படம் 'ஒகரானே'. பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான உன் சமையலறையில் படத்தின் கன்னடப் பதிப்பு. இதில் பியூட்டி பார்லரில் ஒரு உதவியாளர் வேடத்தில் வந்து போவார். 

இவர் நடித்த அடுத்த படம் ஹாரிவு (நீரோட்டம்). கர்நாடக விவசாயி ஒருவர் நோய்வாய்ப்பட்ட தன் மகனை சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு கொண்டு வருகிறார். அங்கே மகன் இறந்துவிட, அவன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அவர் படும் பாடுதான் இந்தப் படம்.

2014-ம் ஆண்டின் சிறந்த கன்னட மொழித் திரைப்படம் என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது இந்த ஹாரிவு. கடந்த ஆண்டு நடந்த பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படத்துக்கு விருது கிடைத்தது.


விஜய் நடித்த மூன்றாவது படம் நானு அவனல்ல, அவளு. அதாவது 'நான் அவன் அல்ல, அவள்'. இந்தப் படத்தில் திருநங்கை பாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய்.

பிஎஸ் லிங்காராவ் இயக்கிய இந்தப் படம் வெளியானபோது வணிக ரீதியாக சரியாகப் போகவில்லை. லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ஐ யம் வித்யா என்ற சுயசரிதை புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம் இது.


இந்த மூன்று படங்கள் வெளியான பிறகும்கூட, சஞ்சாரி விஜய்யை யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது தேசிய விருது அறிவிக்கப்பட்ட பிறகு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயர்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது சஞ்சாரி விஜய் பெயர்.

சிலர் விருது அறிவிக்கப்பட்ட வேகத்தில், சஞ்சாரி விஜய் யாரென்று தெரியாமல், தமிழ் நடிகர் விஜய் மற்றும் ஏற்கெனவே கன்னடத்தில் உள்ள துனியா விஜய் ஆகியோர் படங்களை வெளியிட்டு குழப்பியதும் நடந்தது.

சஞ்சாரி விஜய் மூன்றே படங்கள்தான் நடித்துள்ளார். அவற்றிலும் ஒன்றில் துணைப் பாத்திரமாக வருவார். அவர் நடித்த மீதி இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் தேசிய விருதினை வென்றுள்ளன. ஒன்று சிறந்த நடிப்புக்கு, மற்றொன்று சிறந்த படத்துக்கு. இது வெகு அரிதாகக் கிடைக்கும் கவுரவமாகும். இதில் கன்னடத் திரையுலகம் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.

0 comments:

Post a Comment