
“இலங்கையில் நடந்த இனப்படுகொலையை திரைப்படமாக எடுப்பதற்கு நீங்கள் தயங்குவது ஏன்?” என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார்.
நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்…
நீங்கள் என்ன படம் பண்ணினாலும் அதற்கு இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறதே?
நான் என்ன செய்தாலும், அதற்கு ஒரு சிலர் இடையூறு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ‘தசாவதாரம்’ படத்தின் கதை என்னுடைய கதை என்று ஒருவர் வழக்கு தொடுத்தார். இப்போது வரைக்கும் அவர் எழுந்து நிற்கவில்லை. எங்கிருந்து வந்து கேஸ் கொடுத்தார், எதற்காக கொடுத்தார், எல்லாமே தெரியும். அதே போல தான் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ பெயர் வைக்கக்கூடாது என்றார்கள். ரயில்வே நிலையத்தில் செய்ய வேண்டிய விஷயத்தை படத்தில் செய்ய சொன்னார்கள். விரைவு வண்டி என்று யாரும் சொல்வது இல்லையே. மும்பைக்கு எப்படி தமிழ் பெயர் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அதே போல பல விஷயங்கள் இருக்கிறது. நல்ல வண்டி, ப்ரீயாக ஏறிக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
மேலும், படைப்பாளியின் சுதந்திரத்தை தேசம் முழுவதும் பாதிக்கும் அளவிற்கு தணிக்கை குழு மாறி இருக்கிறது. அது வெறும் சான்றிதழ் அளிக்கக் கூடிய குழு தான். வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். நீயார் கண்டிப்பது என்று கேட்டால், நான் கலைஞன். நான் ஒரு விஷயத்தைச் சொல்லத் துடிப்பவன். மொழியும், கலையும் என் கைவசம். அதைச் சொல்ல உரிமையும், கடமையும் எனக்கு இருக்கிறது. மீண்டும் ஒரு பிரிட்டிஷ் ஆட்சி போல, என்ன சொல்ல இருக்கிறேன் என்பதை எழுதி காட்டிவிட்டு முத்திரை வாங்கிக் கொண்டு படம் எடுக்கும் அவசியம் என் பேச்சு சுதந்திரத்தில் கால் பதித்து விட்டதாக நான் நினைக்கிறேன்.
‘மருதநாயகம்‘ எப்போது தொடங்க திட்டம்?
என்னுடைய நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களிடம்கூட எச்சரிக்கை விடுத்து, இந்தப் படம் எவ்வளவு பெரியது என்று கூறியிருக்கிறேன். தமிழ் படம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். உலகப் படம், ஆங்கிலப் படம், பிரெஞ்சு படம் என்றெல்லாம் நினைவில் கொள்ளும்படி கூறியிருக்கிறேன்.
‘உத்தம வில்லன்‘, ‘பாபநாசம்‘, ‘விஸ்வரூபம் 2′ என தொடர்ச்சியாக உங்களது படங்கள் வெளிவர இருக்கிறதே..
ரொம்ப படங்கள் சேர்ந்து விட்டது. என்னால் சும்மா இருக்க முடியாது. எனக்கு இருக்கும் கால நேரத்தை கணக்கில் கொண்டு ஏதாவது செய்துகொண்டே இருப்பேன். ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆசை இருக்கிறது, திறமை ஓரளவிற்கு இருக்கிறது என்பதால் களத்தில் இறங்கிவிட்டேன். இப்போது ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ முடியும் தருவாயில் இருக்கிறது. ‘விஸ்வரூபம் 2′ அதற்குப் பிறகு வரும். அதுக்கு மேலயும் ஆஸ்கர் தாமதித்தால் இன்னொரு படம் வரும்.
படம் தோல்விடையும் பட்சத்தில், விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்பது பற்றி உங்களது கருத்து?
பணத்தின் ஆசை யாருக்குத் தான் இல்லை. அந்த குணாதிசயம் படம் பார்க்கும் ரசிகனுக்கு வராமல் இருக்க வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள். அவன், பாதி சினிமா பார்த்தேன் எனக்கு பிடிக்கவில்லை, 25 ரூபாய் கொடு என்று கேட்டால் என்ன செய்வது?
‘மும்பை எக்ஸ்பிரஸ்‘ படத்துக்குப் பிறகு இளையராஜாவுடன் நீங்கள் மீண்டும் இணையவில்லை ஏன்?
அவரையும் என்னையும் ஏன் என்றெல்லாம் கேட்க முடியாது. ‘சிங்காரவேலன்’ படத்துக்குப் பிறகு ஏன் அவர் என்னை வைத்து படம் எடுப்பதில்லை என்று கேட்பது மாதிரி தான்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை படமாக எடுக்க தயங்குவது ஏன்?
அதைத் தொட முடியுமா சொல்லுங்கள். ‘தெனாலி’ படத்தில் சுற்றி வளைத்து தொட்டதற்கே பெரிய பிரச்சினையாகி விட்டது. நான் ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். குழந்தை ஒன்று தடுக்கி விழுந்து விட்டால், அய்யோ கிறிஸ்துவ குழந்தை விழுந்துவிட்டதே என்று நாம் சொல்லுவதில்லை. இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அதை நமக்கு நிகழும் கொடுமையாக தான் நினைக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமையைக்கூட நமக்கு நேர்வது போல தான் நினைக்க வேண்டும்.
சினிமா என்பது கலையா, வியாபாரமா?
அது பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தில் இருக்கிறது. இயக்குநரின் பார்வையில் கலை, தயாரிப்பாளரின் பார்வையில் வியாபாரம். இயக்குநர் இது வியாபாரம் என்று நினைத்தாலோ அல்லது தயாரிப்பாளர் இது கலை என்று நினைத்தாலோ தோல்வியடைந்து விடும். அது நியாயமானது என்று நினைக்கவில்லை. குடியிருப்புகளில் வீடுகள் வாங்கினவர்கள் பாதிப்பேர் திரும்பி தான் கேட்பார்கள். விற்கும்போது சொன்ன சத்தியங்கள் எல்லாம் கடைப்பிடிக்கப்பட்டு இருக்காது.
மாற்று முயற்சி – டிஜிட்டல் சினிமா வளர்ச்சி இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?
மெத்தனமாக இருந்துவிட முடியாது. பல நேரங்களில் ஒப்புக் கொள்ளாமல் போன விஷயங்கள் எல்லாம், இப்போது நினைவில் இல்லாமல் போய்விட்டது. டிஜிட்டல் சினிமாவின் வரவு கிட்டதட்ட 15 வருடங்கள் தாமதமாக வந்திருக்கிறது. ‘அதை வெள்ளைக்காரன் முடிவு பண்றான், நாம எப்படி சார் முடிவு பண்ண முடியும்’ என்று நாம் நினைக்கிறோம். 1000 சினிமாக்கள் உருவாகும் ஒரு மாமல்லன் இந்திய சினிமா. சீன சினிமா, இந்திய சினிமா இணைந்து ஒரு முடிவு எடுத்தால் அதை உலக சினிமா கேட்டுக் கொள்ள வேண்டும். இது தான் வியாபார நிஜம். இதை சீனா புரிந்து கொண்ட அளவிற்குக்கூட இந்தியா புரிந்து கொள்ளவில்லை.
எந்தப் படம் எடுத்தாலும், இது ஹாலிவுட் படத்தின் திருட்டு என்கிறார்களே..
இப்போது கதை திருட்டு குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு சுட்டிக் காட்டுவதற்கு நிறைய பேர் இல்லை.
தேங்காயும் கையுமாக காஸினோ திரையரங்கிற்கு சென்றவர்களை எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கேயே உடைத்துவிட்டதால், கதை அவருடையது ஆகிவிடும் என்று எண்ணம். இப்போது இதுவெல்லாம் மாறி, ஒரு சின்ன கர்வம் தமிழனுக்கு வந்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நல்ல விஷயம் ஒரு ஊரில் இருக்கிறது என்றால், அதை நம்ம ஊருக்கு எடுத்து வருவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

0 comments:
Post a Comment