அருண்ராஜா காமராஜ் இதுவரைக்கும் தமிழில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார்.
இவருக்கு வாய்ப்பு தந்த சந்தோஷ் நாராயணன், அனிருத், டி.இமான், ஜி.வி.பிரகாஷ் என்று அத்தனை பேரும் டாப்பில் இருக்கும் இசையமைப்பாளர்கள்தான். அறிமுக நிலையிலிருக்கும் இவரை அவர்கள் பாடல் எழுத அழைப்பதும், இவர் ஒரே சிட்டிங்கில் பாட்டெழுதி அசத்துவதும் ஒருவகையில் கை வண்ணம் என்றாலும், இன்னொரு வகையில் அது ஃபிரண்ட்ஷிப்பின் வண்ணம். எப்படி? அங்கெல்லாம் கதவுகளை திறந்து, ‘நண்பா உள்ள போ…’ என்று அனுப்பி வைத்தவர் பிரபல ஹீரோ சிவகார்த்திகேயன்! அதெப்படி?
‘நானும் சிவாவும் திருச்சியில் ஒண்ணா படிச்சோம். ஜெ.ஜெ. என்ஜினியரிங் காலேஜ்ல படிக்கும் போதே காலேஜ்ல மிமிக்கிரி பண்ணுவோம். அதற்கப்புறம் சென்னை வந்து சிவாவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் ஓரே ரூம்ல தங்குனோம். விஜய் டி.வி யில் கலக்கப் போவது யாரு புராகிராம் சீசன் 3 ல் நானும் சிவாவும் சேர்ந்து மிமிக்ரி பண்ணினோம். அதற்கப்புறம் சீசன் 4 ல் நான் வெற்றியடைஞ்சேன்.

அந்த நேரத்தில்தான் ரெண்டு பேரும் அஜீத் சார் நடித்த ‘ஏகன்’ படத்தில் அவருடன் நடிக்க கமிட் ஆனோம். விசாகப்பட்டினத்தில் நான்கு நாட்கள் ஷுட்டிங் கூட நடந்திச்சு. அஜீத் சாருடன் எங்க ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் கூட இருந்திச்சு. அதற்கப்புறம் படத்தின் நீளம் கருதி எங்க போர்ஷனை கட் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். நான் நாளைய இயக்குனர் புரோகிராம்ல கலந்துகிட்டு டைட்டில் விண் பண்ணினேன். இப்பவும் எங்க பிரண்ட்ஷிப் அதே அன்போடும் கலாட்டாவோடும் போயிட்டு இருக்கு’.
‘மான் கராத்தே’ படத்தில் நானும் சிவாவோட நடிச்சுருக்கேன். ‘என் நண்பன் நல்லா பாட்டெழுதுவான். அவனுக்கு சான்ஸ் கொடுங்க’ன்னு எனக்கு கேட்டு வாங்கிக் கொடுத்தார் சிவா. இப்ப கூட ‘காக்கி சட்டை’ படத்தில் இரண்டு பாடல் எழுதியிருக்கேன் என்று மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
உயிர்மொழி, பீட்ஸா, வில்லா, ஜிகிர்தண்டா, பென்சில், டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, மீண்டும் ஒரு காதல் கதை, காக்கி சட்டை, வாகா, டிமாண்டி காலனி என்று அருண்ராஜா பாடல்கள் எழுதிய படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தோடு கை நிறைய கதைகளோடு முயற்சித்து வரும் இவருக்கு, ஜி.வி.பிரகாஷ் கால்ஷீட் தர சம்மதித்திருக்கிறாராம். ‘படம் இயக்குகிற வரைக்கும் பாடல் எழுதுகிற வாய்ப்பை விடப் போவதில்லை. இயக்குனர் ஆன பின்பும் பாடல் எழுதுவேன்’ என்கிறார் அருண்ராஜா.
ஏன்… உங்க நண்பர் சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டால் கொடுக்க மாட்டாரா? என்றால், சந்தோஷமாக பதில் சொல்கிறார் அருண்ராஜா. கண்டிப்பா கொடுப்பார். ஆனால் அதுக்கு முன்னாடி நான் ஒரு நல்ல டைரக்டர் என்பதை புரூஃப் பண்ணிட்டுதான் கால்ஷீட் கேட்பேன் என்று!
தாங்கிப்பிடிக்கிற சிவகார்த்திகேயன். தர்மசங்கடம் தராத அருண்ராஜா. ஃபிரண்ட்ஷிப்புன்னா இப்படியல்லவா இருக்கணும்?
.jpeg)
0 comments:
Post a Comment