Tuesday, March 24, 2015

சென்ட்டிமென்ட் மீதெல்லாம் நம்பிக்கையில்லாத கமல்ஹாசனுக்கே சென்ட்டிமென்ட் ஆசையை காட்டிவிட்டது அவரது ஆழ்வார்பேட்டை வீடு. கோடை வெப்பத்தின் தாக்கம், மின்விசிறிகளுக்கு தாங்காத மூச்சுக்காற்று, அந்த சின்ன ஹாலில் திரும்பிய இடத்திலெல்லாம் நின்று கொண்டிருந்த நிருபர்களின் கூட்டம், ‘சீக்கிரம் சந்திப்பு முடிஞ்சுருச்சுன்னா, நிம்மதியாக வெளியில் போயிரலாம்… ’ என்று மொத்த கூட்டமும் நினைக்க, கமல் தன் அருகில் வைக்கப்பட்ட ஸ்வெட்டிங் பேப்பரால் அடிக்கடி முகம் துடைத்துக் கொண்டே அந்த அவஸ்தையை தானும் சேர்ந்து சகித்துக் கொண்டார். பேட்டியின் முதல் கேள்வியாக நிருபர்கள் எதை கேட்க நினைத்தார்களோ, அந்த பதிலிலிருந்தே தனது பேட்டியை தொடங்கினார் கமல்.
பல இடையூறான நேரங்களில் நான் இதே இடத்தில் உங்களை சந்தித்திருக்கிறேன். மகிழ்ச்சியான நேரத்திலும் இங்கே சந்திக்கலாம்னு நினைச்சேன். அதனால்தான் உங்களையெல்லாம் இங்க வரச்சொன்னேன். அது மட்டுமல்ல, இந்த வீட்டிலிருந்தான் நான் பாலசந்தர் சாரிடம் வாய்ப்பு கேட்பதற்காக சைக்கிளில் போனேன். ராஜ்கமல் நிறுவனத்திடமிருந்து கூட பாலசந்தர் சார் சம்பளம் வாங்குனதில்ல. ஆனால் இந்த படத்திற்காக நானே நேர்ல வந்துதான் சம்பளத்தை வாங்குவேன் என்று இந்த வீட்டுக்குதான் தேடி வந்து வாங்கினார். நிறைய நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கு இந்த வீடு. அதனால்தான் என்றார் மீண்டும் ஒருமுறை.
நீங்கள் பார்த்த படங்களும், படித்த இலக்கியங்களின் பாதிப்பும் ‘உத்தம வில்லன்’ படத்தில் இருக்கிறதா?
என்னுடைய எல்லா படங்களுமே நான் பார்த்த படங்களின் சாயலும், கேள்விப்பட்ட படங்களின் சாயலும் தான். நான் வந்து ஒரிஜினல் ஆள் கிடையாது. நண்பர்களிடம் இருந்து நல்ல குணங்களை கற்றுக் கொண்டு பின்பற்றும் உங்களைப் போல நானும் ஒருவன் தான். சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை என்பார்கள் இல்லையா. அப்படி ஒரு ஆள் தான் ‘உத்தமவில்லன்’. இப்படத்தில் என்ன இல்லை என்பதை வேண்டுமானால் தெளிவாக சொல்ல முடியும். கார்கள் தலைக்குப்புற விழுந்து வெடிப்பதும், ஒருவர் மீது ஒருவர் கால் கொண்டு பலமாக தாக்குவதும், மூன்று குட்டிக்கரணங்கள் அடிப்பதும் இதில் கிடையாது. இந்தப்படம் வன்முறை அற்ற ஒரு படமாக வாய்த்துவிட்டது.
படம் தோல்விடையும் பட்சத்தில், விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்பது பற்றி உங்கள் கருத்து?
பணத்தின் ஆசை யாருக்குத் தான் இல்லை. அந்த குணாதிசயம் படம் பார்க்கும் ரசிகனுக்கு வரக்கூடாமல் இருப்பது தான் என் வேண்டுகோள். அவன் பாதி சினிமா பார்த்தேன் எனக்கு பிடிக்கவில்லை 25 ரூபாய் கொடு என்று கேட்டால் என்ன செய்வது?
விநியோகஸ்தர்கள் பாடே திண்டாட்டம்தான். ஏனென்றால் பாதி படம் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொல்வது போல படங்களை நான் எடுக்கிறோம். அதெல்லாம் சாத்தியமில்லை. பணம் கேட்டு அம்பு எய்துபவர்கள் உத்தம வில்லர்களாக இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நீங்கள் என்ன படம் பண்ணினாலும் அதற்கு இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறதே?
என்ன செய்யுறது? உன் அட்ரஸ் என்னன்னு எங்கிட்ட கேட்டால், நம்பர் நாலு,, இடையூறு தெருன்னு சொல்ற அளவுக்கு நானும் பழகிட்டேன். நான் என்ன செய்தாலும், அதற்கு ஒரு சிலர் இடையூறு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ‘தசாவதாரம்’ படத்தின் கதை என்னுடையது என்று ஒருவர் வழக்கு தொடுத்தார். இப்போது வரைக்கும் அவர் எழுந்து நிற்கவில்லை. எங்கிருந்து வந்து கேஸ் கொடுத்தார், எதற்காக கொடுத்தார் எல்லாமே தெரியும். அதே போல தான் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ பெயர் வைக்கக்கூடாது என்றார்கள். ரயில்வே நிலையத்தில் செய்ய வேண்டிய விஷயம் அது. அதை ஏன் என் படத்தில் வந்து செய்ய சொன்னார்கள். விரைவு வண்டி என்று யாரும் சொல்வது இல்லையே. மும்பைக்கு எப்படி தமிழ் பெயர் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அதே போல பல விஷயங்கள் இருக்கிறது. நல்ல வண்டி ப்ரீயாக ஏறிக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
மேலும், படைப்பாளியின் சுதந்திரத்தை தேசம் முழுவதும் பாதிக்கும் அளவிற்கு தணிக்கை குழு மாறி இருக்கிறது. அது வெறும் சான்றிதழ் அளிக்கக் கூடிய குழு தான். வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். நீ யார் கண்டிப்பது என்று கேட்டால், நான் கலைஞன். நான் ஒரு விஷயத்தைச் சொல்லத் துடிப்பவன். மொழியும், கலையும் என் கைவசம். அதைச் சொல்ல உரிமையும், கடமையும் எனக்கு இருக்கிறது. மீண்டும் ஒரு பிரிட்டிஷ் ஆட்சி போல, என்ன சொல்ல இருக்கிறேன் என்பதை எழுதி காட்டிவிட்டு முத்திரை வாங்கிக் கொண்டு படம் எடுக்கும் அவசியம் என் பேச்சு சுதந்திரத்தில் கால் பதித்து விட்டதாக நான் நினைக்கிறேன் என்றார் கமல் தன் குரலை சற்றே உயர்த்திக் கொண்டு.

0 comments:

Post a Comment