கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம், கோழி கறிக்கடை நடத்தி வருகிறார். இவரும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாபுவும் சேர்ந்து சினிமா படம் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக புது பட கம்பெனி துவங்கினார்கள். குனியமுத்தூரில் புதிதாக அலுவலகம் திறந்தனர். இவர்களுடன் பாலமுருகன், காந்திராஜன், மோகன சுந்தரம், ஆகியோரும் கூட்டு சேர்ந்தனர்.
ஆர்யா, நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைத்து படம் எடுக்க முடிவு செய்தனர். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டனர். அனைவரும் சென்னை வந்து யுவன் சங்கர் ராஜாவை இது சம்பந்தமாக சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆர்யா, நயன்தாராவை சந்தித்து கால்சீட் கேட்கவும் முயற்சித்தனர்.
இந்த நிலையில் சிவானந்தத்துக்கு பாபு மேல் சந்தேகம் ஏற்பட்டது. படம் எடுப்பதாக தன்னை ஏமாற்றுவதாக கருதினார். இதையடுத்து தான் கொடுத்த 2 லட்சம் ரூபாயை திருப்பித்தருமாறு கேட்டார். பாபு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எற்பட்டது.
அப்போது பாபுவுடன் இருந்த மோகன சுந்தரம் ஆவேசமாகி சிவானந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு சிவானந்தத்துடன் வந்த பாண்டியன் மோகன சுந்தரத்தை தாக்கி உள்ளார்.
இதுகுறித்து இரு தரப்பினரும் போத்தனூர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சிவானந்தம், பாபு, பாலமுருகன், காந்திராஜன், மோகனசுந்தரம் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகிறார்கள். பட கம்பெனி மூலம் நயன்தாரா– ஆர்யா பெயரில் நடந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:
Post a Comment