கொங்கு இளைஞர் சங்கம், கொங்கு கலையரங்கம், கவிதாலயம் இசை பயிற்சி பள்ளி ஆகியவை சார்பில் குணசித்திர நடிகர் டெல்லி கணேசுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது.
முன்னதாக டெல்லி கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான் நாடகம் பார்க்க போன இடத்தில் எதிர்பாராத திருப்பமாக சினிமா நடிகரானேன்.
ஆரம்பத்தில் டெல்லியில் விமான படையில் வேலை பார்த்தேன். பின்னர் சென்னையில் இந்திய உணவு கழகத்தில் பணியாற்றினேன்.
அந்த சமயத்தில் சென்னையில் காத்தாடி ராமமூர்த்தியின் நாடகத்தை பார்க்க போய் இருந்தேன். இதில் எனது நண்பர் ஒருவர் நடித்தார். அப்போது அந்த நண்பரை நான் பாராட்டி பேசினேன். இதை பார்த்த நாடக குழுவினர் எனக்குள் நடிப்பு திறமை இருப்பதாக தெரிவித்தனர். இதனால் விசு எடுத்த நாடகத்தில் முதன்முறையாக நடிக்க தொடங்கினேன்.
பின்னர் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், அந்த நாடகத்தையே சினிமாவாக எடுத்தார். அதில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எனக்கு பாலசந்தர் சார் தான் கணேஷ் என்ற எனது பெயரை டெல்லி கணேஷ் என்று மாற்றினார். இதுவரை 400–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.
தற்போது கமலின் பாபநாசம், ஜோதிகாவுடன் 36 வயதினிலேயே ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.
சென்னையில் சற்று தொலைவிலாவது ‘பிலிம் சிட்டி’யை 40 ஏக்கர் பரப்பில் அமைக்க வேண்டும். இதில் ரெயில்வே ஸ்டேஷன், போலீஸ் நிலையம், தபால் நிலையம் ஆகியவை நிரந்தரமாக செட் போட்டு வைத்தால் இதன் மூலம் சிறு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் பயன் பெறுவார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக எடுத்த கதையை தான் தற்போது வரை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். பழைய கதையை வைத்து புதுமுகங்களை நடிக்க வைத்து படம் எடுக்கிறார்கள்.
அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் அரசியலில் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. 90 சதவீத அரசியல்வாதிகள் சரி கிடையாது. என் மகன் மகாவை (மகாதேவன்) கதாநாயகனாக வைத்து படம் எடுத்துள்ளேன். விரைவில் படம் வெளி வருகிறது. இதற்காக சென்னையில் உள்ள என் வீட்டை விற்று விட்டேன்.
ரூ.3 கோடி செலவில் சிறு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு அரசு வரி சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
Post a Comment