Thursday, March 5, 2015


கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவான 'கொம்பன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் வானொலி நிலையத்தில் வெகு சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் கார்த்தி, ராஜ்கிரண், கருணாஸ், இயக்குனர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நாயகன் கார்த்தி, 'பருத்தி வீரன் கேரக்டரில் இருந்து கொம்பன் கேரக்டர் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும், பருத்தி வீரனை போலில்லாமல் கொம்பன் மிகவும் நல்ல பையன் என்றும் கூறினார். மேலும் ராஜ்கிரண் அவர்களுடன் நடித்த காட்சிகள் மிகவும் உணர்ச்சிமயமாக ரசிகர்களால் உணரப்படும் என்று கூறிய கார்த்தி இந்த  படத்தில் கோவை சரளா இதுவரை நடித்திராத மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு தகப்பனும் தங்கள் மகளின் நல்வாழ்விற்காகவும், சந்தோஷத்திற்காகவும் கடைசி வரை ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள் என்றும், இந்த படத்தின் தன்னுடைய கேரக்டர் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது என்று நடிகர் ராஜ்கிரண் பேசும்போது கூறினார்.

கொம்பன் படத்தின் இயக்குனர் முத்தையா பேசும்போது, 'இந்த படத்தின் ராஜ்கிரண் அவர்கள் நடித்த கேரக்டர் தன்னுடைய வாழ்க்கையில் நிஜமாக பார்த்த கேரடக்டர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகவும், தன்னுடைய தந்தை மற்றும் தாத்தாவின் மறு உருவம்தான் அவருடைய கேரக்டர் என்றும் கூறினார்.

இந்த படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த வீரசமர் அவர்கள் பேசியபோது, ரஜினிக்கு ஒரு எஜமான், கமலுக்கு ஒரு தேவர் மகன், விஜயகாந்துக்கு ஒரு சின்னக்கவுண்டர் போல கார்த்திக்கு ஒரு கொம்பன் இருக்கும் என்றார்.

தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாக கொம்பன் அமைந்துள்ளதாக காமெடி நடிகர் கருணாஸ் கூறினார்.

0 comments:

Post a Comment