‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் வரும் ‘டண்டனக்கா’ என்ற பாடல் ரிலீசுக்கு முன்பே செம குத்தாகிவிட்டது. எல்லா டீக்கடைகளிலும் கிளாசே உடைகிற அளவுக்கு ரிதம் பிய்த்துக் கொள்கிறது. அதற்குள் ஹிட்டான இந்த பாடல் இப்போது படத்தில் இடம் பெறுமா? இதுதான் இப்போது எழுந்திருக்கும் சந்தேகம். இந்த பாடல் வெளியான நாளில் இருந்தே ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் டி.ராஜேந்தர். அவருடைய புகழை சொல்ல அநேக பாடல்கள் இருந்தாலும், இந்த டண்டனக்காவை தேசம் மறக்கவில்லையே என்கிற கவலை இருக்கும்தானே?
‘வெந்த புண்ணில் வெங்காயத்தை பிழிந்த மாதிரி இந்தாளு வேற மறுபடியும் டண்டனக்காவை கிளப்புறாரே’ என்று ஜெயம் ரவி மீதும் செம கடுப்பில் இருந்தார். ஆனால் ‘படத்தில் நான் டி.ஆரின் ரசிகனா நடிச்சுருக்கேன். அவரை இழிவுபடுத்துவதை போல ஒரு சீன் கூட இல்லை. யூட்யூபில் இந்த பாடலை ரீமிக்ஸ் பண்ணி டிஆரின் புகழை கெடுக்க வேண்டாம்’ என்று ஜெயம் ரவி அறிக்கையெல்லாம் கூட விட்டுவிட்டார். இருந்தாலும், அந்த பாடலின் தலையில் பெரிய கல்லாக தூக்கி போட்டிருக்கிறது டி.ஆரின் தரப்பு.
படத்தில் வரும் அந்த பாடலுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறாராம் டி.ஆர். இதையடுத்து தர்மசங்கடத்தில் கையை பிசைந்து கொண்டிருக்கிறது ரோமியோ ஜுலியட் குரூப். இன்னும் சில தினங்களில் நடைபெறவிருந்த இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். இத்தனைக்கும் ஜெயம் ரவியும், டிஆரின் செல்லப்பிள்ளையான சிம்புவும் தோஸ்துகள்தான். அப்பாவை அசிங்கப்படுத்துகிற பாடலுக்கு ஆதரவாக மகனே நடந்து கொள்ள மாட்டாரல்லவா? அதனால் சிம்புவிடமும் வாய் திறக்காமல் அமைதிகாக்கிறாராம் ஜெயம் ரவி.
ஹேய்… எம் பேரு டிஆரு…. வச்சுக்காதே தகறாறு… மீறுனா அறுந்துருண்டா டங்குவாரு… ஹேய்… டண்டனக்கா…. ஹேய்… டமுக்குணக்கா….!

0 comments:
Post a Comment