Monday, March 23, 2015

சிபிராஜ்-சத்யராஜ் நடிப்பில் ‘ஜாக்சன் துரை’..!
சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஜாக்சன் துரை.’
மிக்க் குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் முன்னணி விநியோகஸ்தராக வலம் வந்து கொண்டிருப்பவர் எம்.எஸ்.சரவணன். இவர் ‘மாசாணி’, ‘சலீம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவரும்கூட.
‘வேலையில்லா பட்டதாரி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கிசட்டை’, ‘கயல்’ போன்ற படங்களை சென்னை செங்கல்பட்டு பகுதிகளுக்கு விநியோகம் செய்தவரும் இவரே. மேலும் விரைவில் வெளிவரவுள்ள பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘சண்டிவீரன்’ படத்தை தமிழகமெங்கும் தனது ‘Sri Green Productions’ சார்பில் வெளியிடவுள்ளார்.
இவர் இப்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறார். சென்ற ஆண்டு வெளியான ‘பர்மா’ வெற்றிப் படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில், ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிக்கு பிறகு சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.
‘ஜாக்சன் துரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க, உடன் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
100 வருடங்களாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற தைரியமான போலிஸ் அதிகாரியொருவர் அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

0 comments:

Post a Comment