தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தயாரான பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவரும், ஆடுகளம் படத்தின் எடிட்டிங் பணிக்காக தேசிய விருது பெற்றவருமான எடிட்டர் கிஷோர் இன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36.
பிரபல எடிட்டர்களான பி.லெனின் மற்றும் வி.டி.விஜயன் அவர்களிடம் தனது 21 வயது முதல் உதவியாளராக பணிபுரிந்த கிஷோர், கடந்த 2009ஆம் ஆண்டு ஷங்கர் தயாரித்த ஈரம் படத்தின் மூலம் எடிட்டராக புரமோஷன் அடைந்தார். அதன்பின்னர் அனந்தபுரத்து வீடு, ஆடுகளம், பயணம், மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா உள்பட பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். கிஷோரின் எடிட்டிங்கில் கடைசியாக வெளிவந்த தமிழ்ப்படம் 'பிரகாஷ்ராஜின் 'உன் சமையலறையில்' படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் கடந்த மார்ச் மாதம் 1978ஆம் ஆண்டு பிறந்த கிஷோர் அதே மார்ச் மாதத்தில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிஷோருக்கு அவரது பெற்றோர்கள் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ள நிலையில் அவரது மரணம் அவரது குடும்பத்தினர்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் வெற்றிமாறனின் 'விசாரணை' படத்தின் எடிட்டிங் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் அவர் சிகிச்சைக்காக சென்னை வடபழநியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவர் மூளை செயலிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்துவிட்டதாக இன்று மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். மறைந்த எடிட்டர் கிஷோரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது பெற்றோர்கள் முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இளம் வயதிலேயே தேசிய விருது பெற்ற ஒரு எடிட்டரின் மறைவால் தமிழ்த்திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

0 comments:
Post a Comment