
‘சினிமாவின் அத்தனை பணிகளையும் 3 மாதம் நிறுத்திவிட்டு இருக்கிற சிக்கல்களை தீர்த்தபின் தொழிலை ஆரம்பிக்கலாமா என் யோசிக்கிறோம்‘ என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். தொழில் முடக்கம் செய்கிற அளவுக்கு அப்படி என்னதான் நிகழ்ந்துவிட்டது தமிழ் சினிமாவுக்கு?
ஏறிய பட்ஜெட்
சினிமா தொழிலின் இப்போதைய நிலைமையில் பெரிய ஹீரோ படங்களின் பட்ஜெட் குறைந்தபட்சம் 60 கோடி ரூபாயை தாண்டுகிறது. இத்தனை கோடிக்கு தயாரிக்கப்படும் படங்கள், 70, 80 கோடிக்கு வியாபாரம் செய்யப்படுகிறது. இன்றைய திருட்டு விசிடி காலத்தில் அவ்வளவு தொகையை வசூலிக்க முடியாமல் போனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.
பட்ஜெட் ஏறியதற்கு ஹீரோக்களை கை காண்பிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பெரிய ஹீரோ ஒருவர் நடித்தால் இத்தனை கோடிக்கு பிசினஸ் செய்யலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், வட்டிக்கு வாங்கி பணம் போடுகிறார்கள். இந்தப் பணத்தில், படத்தின் மொத்த பட்ஜெட்டில் 70 சதவிகிதம் ஹீரோ, ஹீரோயின் சம்பளமாக மட்டுமே போய்விடுகிறது. தெலுங்கில் ஒரு ஹீரோவின் படம் ஓடவில்லை என்றால் அடுத்தப் படத்துக்கு தங்கள் சம்பளத்தில் சில கோடிகளை குறைக்கிறார்கள். சமீபத்தில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர் போன்ற ஹீரோக்கள் இதை செய்திருக்கிறார்கள். நம்ம ஹீரோக்கள் செய்வார்களா? என்று கேட்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.
ரஜினி, கமல் விவகாரம்
சமீபத்தில் ‘லிங்கா’ விவகாரத்தை எடுத்துக்கொண்டால் அதை தயாரித்தது ஈராஸ் நிறுவனம். தமிழ்நாடு விற்பனை உரிமையை வாங்கியது வேந்தர் மூவிஸ். வேந்தரிடம் இருந்து வினியோகஸ்தர்கள் படங்களை வாங்கினார்கள். இதில் மினிமம் கேரண்டி (எம்.ஜி) அடிப்படையில் படங்களை வாங்கினால், நஷ்டமானால் திரும்ப கேட்கக் கூடாது என்ற விதி உள்ளது. அந்த விதியை மீறி வினியோகஸ்தர்கள் கோர்ட்டுக்கு போனார்கள். பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் தலையிட்டு பத்து கோடி ரூபாயை வினியோகஸ்தர்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். ‘இது அடுத்தடுத்து பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்‘ என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சிலர். இதே போல கமல்ஹாசன், ‘விஸ்வரூபம்‘ படத்தை டிடிஎச்சில் வெளியிட முயன்ற போது, தியேட்டர்காரர்கள் தடுத்தார்கள். இதை எதிர்த்து தொழிலை முடக்குகிறார்கள் என்று வழக்குத் தொடுத்தார் கமல். ‘இப்போது அந்த வழக்கை வாபஸ் வாங்கினால்தான், ‘உத்தம வில்லன்’ படத்துக்கு தியேட்டர் கொடுப்போம்‘ என்று தியேட்டர்காரர்கள் சொல்வதாகவும் இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் உலவுகிறது ஒரு செய்தி.
ஏற்கனவே, விஜய்யின் ‘தலைவா’ படத்துக்கு காரணமே இல்லாமல் சிக்கல் வந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது ஞாபகமிருக்கலாம்.
கியூப், யுஎஃப்ஓ, பிஎக்ஸ்டி
டிஜிட்டலுக்கு மாறிய பிறகு கியூப், யுஎஃப்ஓ, பிஎக்ஸ்டி ஆகியவை மூலம் திரையிடப்படுகிறது படங்கள்.
‘ஒரு வாரத்துக்கு படங்கள் திரையிட 11 ஆயிரம் ரூபாய் வாடகை கேட்கிறது கியூப். மற்றவை ஆயிரம், ஐநூறு குறைத்துக்கொள்கிறது. இதே நிறுவனங்கள் கேரளாவில் வாரத்துக்கு வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் வாங்குகின்றன. இங்கு மட்டும் ஏன் ஓர வஞ்சனை? அதுமட்டுமல்லாமல் ஹாட்டிஸ்கில் இருந்து டிரான்ஸ்பர் பண்ண ஒன்றரை லட்சம், ஒரு சீனை வெட்டிவிட்டு மறுபடியும் சேர்க்கவேண்டும் என்றால் இரண்டு லட்சம்’ என கேட்கிறார்கள். இவை கடைசி கட்ட நேரத்தில் தயாரிப்பாளர்க ளை வேதனைக்குள்ளாக்குகிறது’ என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.
ரிலீஸ் வரைமுறை
பெரிய ஹீரோக்களின் படங்களை பண்டிகைக் காலங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும் மற்ற நேரங்களில் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடலாம் என்று சொல்லியிருந்தார்கள். இப்போது அது நடைமுறையில் இல்லை. இதனால் ஒவ்வொரு வாரமும் பத்துப் படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்படுகிறது. விளைவு நல்ல படங்கள் கூட ஓடுவதில்லை.
திருட்டு விசிடி
தமிழ் சினிமாவின் மெயின் வில்லன் திருட்டு விசிடிதான். மக்களை தியேட்டருக்கு வரவிடாமல் தடுப்பதும், தயாரிப்பாளரின் பாக்கெட்டுக்கு லாபத்தை கொண்டு சேர்க்காமல் தடுப்பதும் இந்த திருட்டு விசிடிதான். ‘எல்லாவற்றுக்கும் ஒற்றுமையாக போராடும் தமிழ் சினிமா, இதற்கு எதிராகவும் களமிறங்கவேண்டும். திருட்டு விசிடியை தடுக்க கடுமையான நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அவரவர் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் புகார் கொடுப்பதோடு நின்றுவிடுகிறார்கள்’ என்கிறார் முன்னணி ஹீரோ ஒருவர்.
கண்டுகொள்ளாத அரசு
தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட சினிமாவின் அனைத்து சங்கங்களும் ஆளும் அரசின் ஆதரவைக் கேட்டு மன்றாடி நிற்கிறது. அரசையும் அரசின் அதிகார மையத்தில் இருப்பவர்களையும் குளிர வைக்கும் காரியங்களையும் செய்கிறது. ஆனால் அரசின் கடைக்கண் பார்வை கூட சினிமா பக்கம் திரும்பவில்லை. ‘கடந்த 7 வருடங்களாக வழங்கப்படாத மானியத்தை கூட வழங்க அரசு முன்வரவில்லை. வரிவிலக்கு பெற தயாரிப்பாளர்கள் கொடுக்கும் பெரும்தொகை மட்டும் சேர வேண்டியவர்களுக்கு சேரவேண்டிய விதத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறது’ என்று கவலைக்கொள்கிறார் மூத்த தயாரிப்பு நிர்வாகி.
பெப்சி விதி
அடுத்த முக்கியமான பிரச்னை பெப்சி தொழிலாளர் பிரச்னை. முன்பு சினிமாவுக்குள் வந்து சினிமா கற்றார்கள். இன்று சினிமாவை கற்றுவிட்டு வருகிறார்கள். சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு வருபவர்கள், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள தடையாக இருப்பது, பெப்சியும் அதன் விதிமுறைகளும். ஒருவர் படம் எடுக்க வந்தால் வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் இத்தனை பேரை கட்டாயம் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது பெப்சி விதி. இதுவும் தயாரிப்பு செலவை அதிகப்படுத்தும் ஒரு காரணி. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் அதிகரிப்பு, அனுமதி பெறுவதற்காக கொடுக்கப்படும் லஞ்சங்கள், மற்ற விலைவாசி உயர்வுகள் தயாரிப்பு செலவை அதிகப்படுத்துகின்றது.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு 3 மாதம் வேலைகளை நிறுத்திவிட்டு இருக்கிற சிக்கல்களை தீர்க்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தற்போது மற்ற சங்கங்களுடன் பேசி வருகிறார்கள். சில சங்கங்கள் தங்கள் பிடிவாதங்களில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறது.
மறக்க முடியுமா?
1997&ம் ஆண்டு பெப்சியில் இருந்து விலகி ஒரு பிரிவினர் படைப்பாளிகள் அமைப்பை உருவாக்கினார்கள். அதை எதிர்த்து பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டார்கள். சினிமா உலகமே இரண்டு பிரிவாக இருந்தது. ஒரு பக்கம் படப்பிடிப்பில் சிக்கல், மறுபக்கம் வெளியீட்டில் சிக்கல். பெப்சி தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடினார்கள். 6 மாதங்கள் தொழிலாளர்கள் பட்ட சிரமத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
என்ன ஆகும்?
தற்போது ஆலோசிக்கப்பட்டு வரும் தொழில் முடக்க முடிவு நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ரசிகர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. விசிடி, இணையதளம், சின்னத்திரை என அவர்கள் சினிமா காணும் களம் பெரியது. தியேட்டர்காரர்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும். தியேட்டர் ஊழியர்கள் வேலை இழக்கலாம். வட்டிக்கு வாங்கி படம் எடுத்தவர்கள் படத்தை ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தால் வட்டி கட்டவேண்டும். ஹீரோக்கள் தங்கள் படங்களின் படப்பிடிப்பை வெளிமாநிலங்களில், வெளிநாட்டில் வைத்துக்கொள்ள தொடங்குவார்கள். வேலைவாய்ப்புகள் மற்ற மாநிலங்களுக்கு தாவலாம். 3 மாதம் சினிமா பார்க்காமல் இருந்து அதனால் ரசிகர்களுக்கு பெரிய பாதிப்பும் இல்லாமல் போனால் அதுவே நிரந்தரமாகி விடக்கூடிய அபாயமும் இருக்கிறது. எனவே செருப்புக்கு தக்கபடி காலை வெட்டுவதை விட்டுவிட்டு செருப்பை சரிசெய்யத்தான் தயாரிப்பாளர் சங்கம் முயற்சிக்க வேண்டும்’ என்கிறார், அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்.
0 comments:
Post a Comment