Saturday, June 6, 2015



தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக தற்போது இருக்கும் கலைப்புலி எஸ்.தாணு, திரையுலகில் நாற்பதாண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளவர். விநியோகிஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல படிகளில் வெற்றி பெற்ற வந்த தாணு, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய் என இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கலைப்புலி தாணு அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேகமான பேட்டியில் இருந்து ஒருசில பகுதிகள்:
 
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆன நீண்ட நாள் நட்பு குறித்து?
 
சூப்பர் ஸ்டார் அவர்களுடனான நட்பு குறித்து விவரிக்க ஒருநாள், இரண்டு நாள் போதாது. ரஜினிகாந்த் முதன்முதலில் ஹீரோவாக நடித்த 'பைரவி' படத்திற்காக அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து அந்த படத்திற்காக வித்தியாசமாக விளம்பரம் செய்தேன். அதுவரை தமிழ்நாடு இரண்டு ஷீட், நான்கு ஷீட் போஸ்டர்களைத்தான் பார்த்திருந்தது. முதன்முதலாக பைரவி படத்திற்காக ஆறுஷீட் போஸ்டரை தயார் செய்து வெளியிட்டதால் அந்த காலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
முதன்முதலில் ரஜினியை சந்தித்த அனுபவம் எப்படி இருந்தது?
 
முதன்முதலில் ரஜினி அவர்களை நான் ராஜகுமாரி தியேட்டரில்தான் சந்தித்தேன். அந்த சுக அனுபவத்தை மறக்க வே முடியாது. என்னை சந்தித்தவுடன் என்னுடைய கையை பிடித்து அவருடைய ஸ்டைலில் 'பெண்டாஸ்டிக் புரமோஷன்' என்று என்னை பாராட்டியது என் மனதில் இன்னும் அப்படியே இருக்கின்றது.
 
ரஜினியுடன் ஏற்பட்ட நீண்ட நாள் நட்பு குறித்து?
 
பைரவி படத்திற்கு பின்னர் ராம் ராபர்ட் ரஹிம், கை கொடுக்கும் கை, அடுத்த வாரிசு, போன்ற பல ரஜினி படங்களை விநியோகம் செய்து அதிகம் சம்பாதித்தேன். நான் முதன்முதலில் என்னுடைய நண்பர் கலைப்புலி ஜி.சேகரன் அவர்களுடன் இணைந்து 'யார்' என்ற படத்தை தயாரித்த போது, அந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க ரஜினிகாந்த் அவர்களை கேட்டுக் கொண்டோம். அவரும் அந்த படத்தில் எங்களுக்காக ஒரு காட்சியில் நடித்து கொடுத்தார். அந்த படத்தில் அவர் தனது பூஜை அறையில் ராகவேந்திரா சுவாமிகளை கும்பிடுவது போன்று நடித்திருப்பார். உண்மையில் அவர் எங்கள் நிறுவனமும், எங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அன்று வேண்டியிருப்பார். அவருடைய வேண்டுதலால்தான் இன்று வரை நான் திரையுலகில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறேஎன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
 
யார் படத்தின் நூறாவது நாள் விழா மேடையில் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு சிறுகதை ஒன்றை கூறினார். ஒரு பணக்காரரும், ஒரு ஏழையும் நண்பர்களாக இருந்தனர். ஒரு கட்டத்தில் பணக்கார நண்பருக்கு பணச்சிக்கல் வந்தபோது ஏழை நண்பர் பணம் கிடைக்க உதவி செய்தார். எப்படி உன்னால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடிந்தது என ஏழை நண்பரை பார்த்து பணக்கார நண்பர் கேட்டபோது, 'நீ பணத்தை சம்பாதித்தாய், நான் மனிதர்களை சம்பாதிதேன்' என்று கூறினார். மேலும் அந்த மேடையிலேயே என்னை அந்த ஏழை நண்பராக ரஜினி ஒப்பிட்டபோது எனக்கு பெருமையாக இருந்தது. யார் படத்திற்காக நாங்கள் செய்த வித்தியாசமான விளம்பரம் ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை எங்களுக்கு அந்த படத்தின் அனுபவம் கற்றுக் கொடுத்தது.
 
லிங்கா பிரச்சனையில் உண்மையில் என்னதான் நடக்கின்றது?
 
லிங்கா படத்தை பொருத்தவரையில் அந்த படத்தை வாங்கியவர்கள் நல்ல அனுபவமுள்ள டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் படத்தை விற்காமல் புதிதாக தொழிலுக்கு வந்தவர்களிடம் கொடுத்தவர்கள். இந்த படத்தை வாங்கிய புதியவர்களில் இரண்டு பேர் மட்டுமே மிகவும் பிரச்சனைக்குரியவர்களாக மாறினர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிங்காரவேலன் என்பவர் மட்டுமே மீடியாவில் தன்னுடைய பெயர் வரவேண்டும் என்பதற்காக தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே வந்தார்.
 
தேவையான அளவு நஷ்ட ஈடு தொகையை பெற்றுக்கொண்ட பின்னரும் ஊடகங்களிடம் இல்லாததையும், பொல்லாததையும் பேசி வருகிறார். நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் பலருடன் நானும் கூட இருந்துதான் அனைவருக்கும் நஷ்ட ஈடு தொகையை பட்டுவாடா செய்தோம். பணத்தையும் பெற்றுக்கொண்டு ரஜினியை கடவுள் அவதாரம் என விளம்பரம் செய்து பாராட்டிவிட்டு, தற்போது மீண்டும் மாற்றி பேசுகிறார் என்றால் அவர் பின்னால் இருந்து ஏதோ ஒரு சக்தி இயங்குவதாக தெரிகிறது. ஆனால் காலம் அவர்களை அடையாளம் காட்டும். ஒரு நல்ல வெற்றி படத்தை மூன்றாவது நாளே அந்த படத்தை வாங்கியவரே மோசமான படம் என்று வேண்டுமென்றே விளம்பரம் செய்த சிங்காரவேலன், மீண்டும் மனம் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
 
நீங்கள் தயாரிக்கும் படத்தின் கதையை எப்படி தேர்வு செய்வீர்கள்?
 
ஒரு கதையை கேட்கும்போதே அந்த கதை என் மனதில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த மாதிரி கதையை தேர்வு செய்து தான் நான் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்வேன்.
 
பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு குறிப்பிட்ட சில தேதிகளை ஒதுக்கியது ஏன்?
 
பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகும்போது பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமிப்பு செய்து கொள்வதால் சிறிய படங்கள் ரிலீஸாக முடியாத அல்லது ரிலீஸானாலும் எடுபட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சிறிய பட்ஜெட் படங்களையும், அதன் தயாரிப்பாளர்களையும் வாழ வைக்கவே விநியோகிஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசி பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாவதற்கான நாட்களை குறித்தோம். இதன்மூலம் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக லாபம் அடைவார்கள் என்பது எனது நம்பிக்கை.

0 comments:

Post a Comment