திரையுலகில் கேமராவுக்குப் பின்னாலிருக்கும் எவரும் எளிதாக அடையாளம் காணப்பட்டதில்லை. அப்படித்தான் இருந்தார் ‘நட்டி’ என்கிற நட்ராஜ் சுப்ரமணியம். தமிழராக இருந்தும் இந்திக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டியவர்.
‘ஜப் வி மேட்’, ‘ராஞ்சனா’ உள்ளிட்டு இந்தியில் பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பாலிவுட்டின் முதல்நிலை ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்ராஜுக்குத் தமிழ்ப்படவுலம் மீதும், நடிப்பின் மீதும் கொண்ட காதலால் ‘சக்கரவியூகம்’ படத்தின் மூலம் ஹீரோவானார்.
தொடர்ந்து ‘நாளை’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மிளகா’ படங்களில் நடித்தாலும் ‘சதுரங்க வேட்டை’ படம்தான் அவருக்கும், ஹீரோ என்பதற்கான தனி அடையாளத்தையும் பெற்றுத் தந்தது.
இப்போதும் ஒளிப்பதிவை விட்டுவிடாமல் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் நட்டி. இது பற்றிக் கேட்டால், “புலி படத்தினால் நான் இழந்த பெரிய இந்திப்படங்கள் மூன்று. ஆனால், அது பற்றி நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால் விஜய் கூப்பிட்டதால்தான் நான் இதற்கு வந்தேன். அவரது படத்துக்கு மீண்டும் ஒளிப்பதிவு செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்..” என்கிறார் சிரித்துக்கொண்டே.
‘மீண்டும் விஜய் படத்துக்கு’ என்பது சிலருக்குப் புரியாமலிருக்கலாம். விஜய்யின் ‘யூத்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் நட்ராஜ்தான். பிறகுதான் இந்திக்குப் போய் செட்டிலானார். இருந்தும் தமிழுக்கு வந்தது பற்றிக் கேட்டால், “தமிழை எப்படி மறக்க முடியும்..? இங்குதான் மண்மணம் மிக்க படங்களை எடுத்து வெற்றி பெற முடியும். இந்தியில் எல்லாமே 100 கோடி முதலீட்டுப் படங்கள் எனும்போது அதை முன்னிறுத்தி கலாச்சார அடையாளங்கள் இல்லாத படங்களையே எடுக்க முடிகிறது..!” என்கிறார்.
இப்போது அவர் நடித்திருக்கும் ‘கதம் கதம்’ படமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்க, அடுத்து பாண்டிராஜின் உதவியாளர் ‘ராமு’ இயக்கவிருக்கும் ஒரு படத்திலும், ‘உத்தரவு மகாராஜா’ என்கிற படத்திலும் ஹீரோ ஆகவிருக்கிறார் நட்ராஜ்.
“சதுரங்க வேட்டை படம் வெற்றியடைந்தபோது அதே ‘கான் மென் ஜேனரி’ல் எனக்கு வந்த மூன்று படங்களை மறுத்தேன். இப்போது ‘கதம் கதம்’ வெற்றியடையவே போலீஸ் கதைகளாக வருகின்றன. அவற்றையும் மறுக்கிறேன்.
காரணம், நான் முதலில் ஹீரோவான ‘சக்கரவியூகம்’ படம்தான் இப்போது வரும் பல படங்களுக்கு முன்னோடியாக இருந்தது. அதேபோல் தமிழில் முதல்முறையாக ‘கான் ஜேனர்’ படமாக ‘சதுரங்க வேட்டை’தான் அமைந்தது. இப்போது இந்த வழியில் பல படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வகையில் புதிய முயற்சிகளையே என் நடிப்புக்கான களமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்..!” என்கிறார் நட்டி.
உங்க வழியிலேயே போங்க பாஸ்..!


0 comments:
Post a Comment