ஜூலை 15 ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஷால் என்று விஷாலின் நட்பு வட்ட நட்சத்திரங்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் பதவி வகித்து வருகின்றனர்.
நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
2006, 2009, 2012 ஆகிய மூன்று ஆண்டுகளுமே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமாரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நான்காவது முறையாகவும் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், இம்முறை இருவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை.
சரத்குமார், ராதாரவியை எதிர்த்து கடந்த சில வருடங்களாகவே எதிர்ப்பு அணியை உருவாக்கி வைத்திருக்கிறார் விஷால்.
குறிப்பாக, நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான பிரச்சனையில் தொடர்ந்து தன் எதிர்ப்பை தெரிவித்து வரும் விஷால், இந்தத் தேர்தலில் தன் அணியினரை களத்தில் இறக்கி சரத்குமார், ராதாரவியை தோற்கடித்தே தீர வேண்டும் என்று திட்டமிட்டு தீவிரமாக வேலைகள் பார்த்து வருகிறார்.
சரத்குமாரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி முதலில் சிவகுமாரை அணுகினார் விஷால். அவர் அதற்கு உடன்படாததினால் தற்போது நாசரை தலைவர் பதவி வேட்பாளராக அறிவிக்க தீர்மானித்துள்ளனர். செயலாளர் பதவிக்கு பொன்வண்ணனை போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளனர்.
அப்படீன்னா… விஷால்?
தற்போது தலைவர் பதவிக்கு போட்டியிட்டால்… இந்த பதவிக்காகத்தான் இத்தனை நாட்களாக சரத்குமாரை எதிர்த்து பாலிடிக்ஸ் பண்ணியதாக தன்னைப் பற்றி விமர்சனம் வரும் என்பதால், இம்முறை தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் விஷால்.
அதேசமயம், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தவேளையில் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.
அடுத்தகட்டமாக தலைவர் பதவியில் அமர்வதுதான் அவரது திட்டம் என்பதை சொல்லத்தேவையில்லை.
அதுபோலவே, முதலில் துணைத்தலைவராக நடிகர் சங்கத்துக்குள் நுழைந்து பிறகு தலைவர் பதவியைப் பிடிக்க விஷால் திட்டமிட்டிருக்கிறாராம்.

0 comments:
Post a Comment