
ஒரு காலத்தில் தமிழ் படங்கள் தமிழ்நாடு, எப்எம்எஸ் என்ற இரண்டு ஏரியாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது. தற்போது அண்டை மாநிலங்களை எல்லைகளாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா நடித்த படங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பையிலும் வெளியாகிறது. வேற்றுமொழி படங்களை ரிலீஸ் செய்வதால் கன்னட படங்களின் வசூல் பாதிக்கிறது என்பதால் கர்நாடக திரையுலகினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தற்போது மலையாள திரையுலகினரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கின்றனர்.
லிங்கா, கத்தி, ஐ போன்ற படங்கள் கேரளாவில் ரிலீஸ் செய்தபோது நேரடி மலையாள படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.தமிழில் ‘அரண்' மற்றும் பல்வேறு மலையாள படங்களை இயக்கிய மேஜர் ரவி கூறியது:உண்மையில் இது தர்மசங்கடமான நிலை. தமிழ் திரையுலகம் பெரியது. பல கோடி செலவில் படங்கள் உருவாகின்றன. ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் அப்படங்களை ரிலீஸ் செய்ய முடிகிறது.
கேரளாவில் லாப நோக்குடன் அப்படங்களை தியேட்டர் அதிபர்கள் திரையிடுவதை குறைசொல்வதற்கில்லை. ஆனால் இதன் மூலம் மலையாள திரையுலகின் வருமானம் கவலைக்கிடமாகி விடுகிறது. அதிகபட்ச தியேட்டர்களில் தமிழ் படங்கள் திரையிடும்போது மலையாள படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. இதனால் பட ரிலீசை தள்ளி வைக்க வேண்டி உள்ளது. சிலசமயம் ரிலீஸ் ஆன தமிழ் படங்கள் திடீரென்று பிளாப் ஆகும் பட்சத்தில் உடனடியாக மலையாள படங்களை ரிலீஸ் செய்யமுடியாமல் போகிறது. அந்த நேரத்தில் தியேட்டர்கள் காற்றுதான் வாங்குகிறது. மலையாள படங்கள் தேங்கிவிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழ் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் கேரளாவை அவர்கள் ரிலீஸ் மையமாக பயன்படுத்தக்கூடாது. இந்த விஷயத்தில் கேரள அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ இவ்வாறு மேஜர் ரவி கூறி உள்ளார். இதே கருத்தை மேலும் சில மலையாள தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment