Friday, February 6, 2015



திருப்பூரில், பள்ளிக்குச் செல்லாமல் அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' படம் பார்க்க தியேட்டருக்குச் சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அடுத்தமாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இன்று முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்குகிறது. இந்நிலையில், நேற்று கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்' படம் ரிலீசானது. 

முதல் நாளான நேற்றே அப்படத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில், திருப்பூரில் சில மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் தியேட்டருக்குச் சென்றுள்ளனர். தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் சில பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிற்பதை சாலையில் சென்ற திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த முருகன், அம்மாணவர்கள முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரவழைத்தார். அம்மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. பிடிபட்ட 17 மாணவர்களும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், ''பள்ளியில், திருப்பு தேர்வு நடந்து வருகிறது; நாளை (இன்று) செய்முறை தேர்வும், அடுத்த மாதத்தில், பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், வகுப்புக்கு வராமல் பள்ளி சீருடையில், மாணவர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அவர்களது ஒழுங்கீன செயலுக்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேர்வு நேரத்தில், மற்ற மாணவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். 

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் வெளியில் சுற்றக் கூடாது, பள்ளி முடிந்து நேராக வீடு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகளை வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன்னர் தான் பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment