
அண்மையில் பிரபல புலனாய்வு இதழான நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் அவர்களின் மகள் திருமணம் சென்னையில் நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் உள்ளிட்ட தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட திருமணம் அது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சரத்குமார், உள்ளிட்ட ஏராளமான திரையுலக விஐபிகளும் கலந்து கொண்டார்கள். சிவகார்த்திகேயனுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்ததாம். படப்பிடிப்பில் பிசியாக இருந்த அவர், தன்னால் வர முடியாவிட்டாலும், தனது மனைவியையும், அம்மாவையும் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார்.
அவ்வளவு கூட்டத்துக்கு நடுவிலும், தங்கள் இருவரையும் நக்கீரன் கோபாலிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாராம் சிவகார்த்திகேயனின் தாயார். தனது கணவர் போலீஸ் அதிகாரியாக இருந்த நேரத்தில், அவரும் நக்கீரன் கோபாலும் ஒன்றாக பழகியவர்கள்தான் என்கிற விஷயத்தை தாயார் நினைவூட்டியிருக்கிறார். சட்டென நெகிழ்ந்து போனாராம் கோபால். ஏன்? என்ன காரணம்? இவர் சிறையிலிருந்த நேரத்தில், தனது சொந்த செல்வாக்கில் அவருக்கு நல்ல உணவு ஏற்பாடு செய்து கொடுத்தவரே சிவகார்த்திகேயனின் அப்பாதானாம்.
அப்போதிலிருந்தே அந்த அதிகாரி மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தாராம் நக்கீரன் கோபால். அவரது மகன்தான் சிவகார்த்திகேயன் என்று தெரிந்தால் எப்படியிருக்கும். மனசெல்லாம் பூரித்துப்போனாராம் கோபால். மிகுந்த மரியாதையோடு அவர்களை வணங்கி அனுப்பி வைத்தாராம். மணமக்களும் அவர்களிடம் ஆசிபெற்றிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment