Wednesday, February 11, 2015

அருண்விஜய் நாயகனாக நடித்த ‘வா டீல்' படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அருண்விஜய் - கார்த்திகா இணைந்து நடித்துள்ள படம் வா டீல். இப்படத்தினை அறிமுக இயக்குனர் சிவ ஞானம் இயக்கி இருக்கிறார். முதலில் ‘டீல்' என வைக்கப்பட்ட பெயர், பின்னர் சிலப்பல காரணங்களுக்காக வா டீல் என மாற்றப் பட்டது. வா டீல் படம் தாமதமாகிக் கொண்டிருந்த வேளையில் தான் கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத்தின் வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது அருண்விஜய்க்கு. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன் படுத்திக் கொண்டார் அவர்.

என்னை அறிந்தால் படத்திற்காக உடம்பை இரும்பாக்கி எய்ட் பேக் வைத்து கடினமாக உழைத்திருந்தார் அருண்விஜய். உழைப்பு வீண் போகவில்லை. எதிர்பார்த்தது போலவே, அருண்விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்தது.

என்னை அறிந்தால் படத்தில் அஜீத் பேசுவது போல் ஒரு வசனம் இருக்கும். அதாவது ‘ஒரு மெல்லிய கோடு, கோட்டிற்கு அந்தப் பக்கம் போனால் நான் கெட்டவன். இந்தப் பக்கம் நின்றால் நல்லவன்' என வசனம் வரும். அது தற்போது அருண்விஜயின் சினிமா எதிர்காலத்திற்கும் பொருந்துகிறது.

இதுவரை நாயகனாக மட்டுமே நடித்து வந்த அருண்விஜய், என்னை அறிந்தால் படத்தில் தான் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து அவர் வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடிப்பாரா, அல்லது பழைய மாதிரி மீண்டும் நாயகனாகவே நடிப்பாரா என்ற கேள்வி அனைத்து ரசிகர்களின் மனதிலும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அருண்விஜயிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' எனப் பதிலளித்தார்.

இந்நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த வா டீல் படத்தை ரிலீஸ் செய்வதற்காக நடவடிக்கைகள் முடுக்கி விடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஏற்கனவே படமாக்கப் பட்டிருந்தாலும், இப்போது தான் ரிலீஸ் செய்யப் படுவதால் (இப்போதைக்கு) அருண்விஜய் கோட்டிற்கு இந்தப்பக்கம் தான் எனக் கூறப்படுகிறது.

வா டீல் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், சதீஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். அருண் விஜய் - மகிழ்திருமேனி கூட்டணியில் வெளியான தடையறத்தாக்க திரைப்படத்தின் வில்லனான வம்சி இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

0 comments:

Post a Comment