Thursday, February 12, 2015


வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்' படத்தின் வசன காட்சிகளின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது மாஸ் படக்குழுவினர் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணப்பட்டினம் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இங்கு இந்த படத்தின் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'என்னை அறிந்தால்' புகழ் ஸ்டண்ட் இயக்குனர் சில்வா, சண்டைக்காட்சிகளை அமைத்து வருகிறார். இந்த சண்டைக்காட்சியில் சூர்யா, சமுத்திரக்கனி, பார்த்திபன், ரியாஸ்கான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததும், ஒரு பாடல் காட்சிக்காக மாஸ் படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே பல்கேரியாவில் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ள படக்குழுவினர் மீண்டும் வெளிநாடு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment