'என்ன தல... திரும்பவும் அதே நரைச்ச முடி ஸ்டைல்தானா.. போரடிக்குதே!'
அஜீத்தின் 56 வது பட ஷூட்டிங் ஸ்டில்கள் லீக்காகி, இணையத்தில் பரபரவென உலா வருகின்றன. 'என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு அவர் சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தற்போது அஜித்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், முதன்முதலாக இப்படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த படங்கள்தான் நேற்று முழுக்க இணையதளங்களில் பரபரவென பகிரப்பட்டன. ஷூட்டிங் பார்க்க வந்த யாரோ எடுத்து வெளியிட்ட மாதிரிதான் இவற்றின் தரம் உள்ளது.
இந்தப் படங்களில் ஒன்றில் லட்சுமி மேனனை அஜித் கல்லூரிக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. லட்சுமி மேனன் சுடிதார் உடையில், கையில் ஒரு பையுடன் கல்லூரி செல்லும் பெண் போல நிற்கிறார்.
அஜித் பச்சை நிற சட்டையும், வெள்ளை பேன்ட்டும் அணிந்து, கையில் ஒரு புத்தகத்துடன் நிற்கிறார். நெற்றியில் திருநீறு அணிந்து காட்சி தரும் அவர், தனது வழக்கமான தலை நரைத்த தோற்றத்திலேயே வருகிறார். க்ளீன் ஷேவ் செய்து, ட்ரிம் செய்யப்பட்ட மீசையுடன், வீரம் படத்தின் இரண்டாவது பாதியில் வருவது போல காட்சி தருகிறார்.
இன்னொரு படத்தில் அவர் தண்ணீர் குடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அஜீத்தின் இந்தப் படங்களைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், 'என்ன தல... திரும்பவும் அதே நரைச்ச முடி ஸ்டைல்தானா.. போரடிக்குதே... வேறு ஸ்டைலில் நடித்தால் நன்றாக இருக்குமே' என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment