கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம், நான் தயார் இல்லை: தீபிகா படுகோனே
திருமணம் செய்து கொள்ள தற்போது ஒரு அவசரமும் இல்லை என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் வெற்றி நாயகி யார் என்று யாரைக் கேட்டாலும் தீபிகா படுகோனேவின் பெயரை தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதனால் தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகிறார்கள். இத்தனை பிசியாக இருக்கும் தீபிகாவின் வாழ்வில் காதலும் உள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் நடிக்கையில் தீபிகாவுக்கும், ரன்வீர் சிங்கிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதலை ரன்வீர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். தீபிகா வழக்கம் போல மழுப்பி வருகிறார்.
காதலர்களாக ஜோடி போட்டு வலம் வரும் ரன்வீரும், தீபிகாவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. ஆனால் தீபிகா வேறு விதமாக நினைப்பது தற்போது தான் தெரிய வந்துள்ளது.
செட்டிலாவது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. வேலை என்பது வேறு, திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது வேறு விஷயம். அதற்கு நான் தயாராக இல்லை என்று நினைக்கிறேன் என்கிறார் தீபிகா.
திருமணம் செய்து கொள்வதில் அவசரப்பட விரும்பவில்லை. வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் விஷயம். அதனால் அது சரியான நபருடன் சரியான நேரத்தில் நடக்க வேண்டும். புனிதமான திருமணத்தை அவசரப்பட்டு செய்ய விரும்பவில்லை என்று தீபிகா மேலும் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படம் பாஜிராவ் மஸ்தானி. அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் தீபிகா தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

0 comments:
Post a Comment