புதுப் படத்தை அறிவித்தார் கமல்.. அவரே தயாரிக்கிறார்!
‘உத்தம வில்லன்' படத்தை அடுத்து, கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘தூங்காவனம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தை அவருடைய சொந்தப்பட நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘உத்தம வில்லன்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கினார்.
இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த ‘பாபநாசம்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். படத்தில் 2 குழந்தைகளுக்கு தந்தையாக கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்' என்ற மலையாளப்படத்தை தழுவிய கதை ஆகும்.
இதையடுத்து அவர் நடிப்பில் உருவான ‘விஸ்வரூபம்-2' திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்தநிலையில் கமல்ஹாசன் தான் நடிக்க இருக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நாங்கள் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். நான் நடிக்கும் அடுத்த படத்தை ‘ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
எனது புதிய படத்துக்காக பல தலைப்புகளை யோசித்தோம். இறுதியில் இந்த படத்துக்கு ‘தூங்காவனம்' என்று பெயரை வைக்க முடிவு எடுத்தேன். இது விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட திகில் படம். எனது உதவியாளராக பணிபுரிந்த ராஜேஷ், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார்," என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment