கேரளாவின் சுற்றுலா தூதுவரான ஷாருக்கான்
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராப் ஆகியோரை கேரள மாநில சுற்றுலா துறையின் விளம்பர தூதுவர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரையும், மலைவாசஸ்தலங்களும் உள்ளன. ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. இவற்றை நாடி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது கேரளாவில் மது பார்கள் மூடப்பட்டதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து விட்டது. இதனால் வருவாய் இழப்பும் ஏற்பட்டது. இதனை ஈடுகட்டவும், மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டவும் அரசு முடிவு செய்தது.
இதற்காக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராப் ஆகியோரை கேரள மாநில சுற்றுலா துறையின் விளம்பர தூதுவர்களாக நியமிக்க ஏற்பாடு நடந்தது. இவர்களுக்கான ஊதியம் மற்றும் ஒப்பந்த விபரங்களை அதிகாரிகள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராப் தற்போது விளையாட்டில் இருந்து ஒதுங்கி விட்டார். இருந்தாலும் ஜெர்மன் நாட்டில் அவர் இன்னும் பிரபலமாகவே விளங்குகிறார். அவர் மூலம் வெளிநாட்டு பயணிகளை கேரளாவுக்கு ஈர்த்து வர முடியும் என அரசு எண்ணுகிறது.
இது போல இந்தி நடிகர் ஷாருக்கான் மூலம் வடமாநில பயணிகளை கேரளாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் அரசு நம்புகிறது. இவர்கள் மூலம் கேரளாவின் ஆயுர்வேத சிகிச்சையை பிரபலபடுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சுற்றுலா துறை விளம்பர தூதுவராக நடிகர் அமிதாப்பச்சனும், மத்திய அரசின் சுற்றுலா துறை தூதுவராக நடிகர் அமீர்கானும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment