Sunday, May 17, 2015


வங்கதேச தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய். முரளி விஜயின் சொந்த ஊர் சென்னைதான். ஆனால், மற்ற வீரர்களைப் போல முரளி விஜய்க்கு கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு ஸ்மூத்தாக இருந்தது இல்லை. 12வது வகுப்பில் பெயிலாகி வீட்டை விட்டு வெளியேறிய முரளி விஜய் தெருவில் படுத்து உறங்கி, திருவேல்லிக்கணி மேன்சனில் மேலும் 2 பேருடன் ரூமை பகிர்ந்த கொண்டவர்.

ஆனால், அவரது கிரிக்கெட் தாகம்தான் இன்று அவரை இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2009 முதல் 2013ஆம் ஆண்டு வரை 5 சீசன்களில் முரளி விஜய் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடினார். இப்பொது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையை போலவே சொந்த வாழ்க்கையிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. சக வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியை அவர் திருமணம் செய்து கொண்ட போது பெரியதாக சர்ச்சை எழுந்து அடங்கியது. எனினும் கிரிக்கெட்டை பொறுத்த வரை முரளி விஜய் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அண்மையில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு முரளி விஜய் மனம் திறந்து பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது :

எனது குடும்பமே படிப்பு படிப்பு என்று அலையும் குடும்பம். 100க்கு ஒரு மார்க் குறைவாக எடுத்தாலும் வீட்டில் திட்டு விழும். எனது சகோதரி 12ஆம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண் பெற்றவர். ஆனால் நான் 12ஆம் வகுப்பில் பெயில் ஆனேன். தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறினேன். தெருவுக்கு வந்த போதுதான் சுதந்திரத்தை அனுபவித்தேன். எப்போதும் தெருவில்தான் இருப்பேன். தெருவில் சுற்றினாலும் ஒரு மனிதனால் வாழ முடியும் என்றால் அதற்கு உதாரணம் நான்தான். அது எனது தத்துவமும் கூட. இப்போது என்னால் உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் வாழ முடியுமென்றால் தெரு கற்றுக் கொடுத்த பாடம்தான் அதற்கு காரணமாக இருக்கும்.

கடந்த 1999ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் 136 ரன்கள் எடுத்தார். அதே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம், சரத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். சேப்பாக்கத்தில் அந்த போட்டியை நான் நேரில் பார்த்தேன். எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்திய ஆட்டம் அது. இதேபோல் நாமும் ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்ற உத்தேவகம் எனக்குள் ஏற்பட்டது.

தமிழக அணியின் டிரையலுக்கு சென்ற சமயத்தில் எனக்கு 21 வயது. இளம்வயதுக்குரிய உற்சாகத்தில் நீண்ட முடி வளர்த்திருந்தேன். முடி அதிகமாக வளர்த்திருந்ததால், என்னை தமிழக அணியில் சேர்க்கவிலலை. இது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டுக்கும் தலைமுடிக்கும் என்னப்பா சம்பந்தம் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பயிற்சிக்கு லேட்டாக வருகிறான். ஒழுங்காக விளையாடவில்லை இதனால் அணியில் இடம் கிடைக்கவில்லையென்றால் நியாயம். முடி அதிகமாக இருப்பதெல்லாம் ஒரு காரணமா? என்று நொந்து போனேன்.

இந்த மனிதர்களை மாற்ற முடியாது. நம்மை நாம் மாற்றிக் கொள்வோம் என்ற எண்ணம் உருவானது. முடியை எப்போது வேண்டுமானாலும் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை போய்விட்டால்... என்ன செய்வது என்ற பயமும் எனக்குள் எட்டிப்பார்த்தது. என்னை மாற்றிக் கொண்டேன். முடியை குறைத்தேன்.கோபப்படுவதை நிறுத்தினேன். தொடர்ந்து தமிழக அணிக்கு மட்டுமல்ல 2008 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் இடம் பிடித்தேன் என்றார்.

சக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின்  முன்னாள் மனைவியை திருமணம் செய்தது குறித்து முரளி விஜய் கூறுகையில், இது எனது தனிப்பட்ட விஷயம். மூன்று பேர் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். இதனை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை என தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின் இந்திய அணியில் முரளி விஜய்க்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் முரளிவிஜய்..

0 comments:

Post a Comment