Tuesday, May 19, 2015




8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் கடந்த வெள்ளி கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 36 வயதினிலே. இந்நிலையில் இந்தப் படத்திற்குக் கிடைத்த பாராட்டுக்கள் குறித்தும், பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நடிகை ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும், மரியாதையும் என்னை நெகிழ வைத்துள்ளது. இந்த படம் எனக்கு மட்டுமல்ல, என் கணவர் சூர்யா, இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் என அனைவருக்கும் மறக்க முடியாத படமாக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது நான் அதை வரவேற்று ஏற்றுக் கொண்டேன். அதற்கு முக்கிய காரணம் இல்லத்தரசிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். பெண்கள் பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்கின்றனர். இந்த தவிப்பு என்னுள் எப்போதும் இருந்து வந்தது. அதன் காரணமாகவே, நான் இப்படத்தில் நடித்தேன்.
ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரப்படும் விதமாக இப்படம் அமைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு பெண்ணின் சுயமரியாதை, நம்பிக்கை, சாதனை எல்லாம் அவள் திருமண பந்தத்தால் ஏற்படும் அந்தஸ்தில் மட்டும் இல்லை. மாறாக அவள் அவளது கனவுகளை எப்படி மெய்ப்பட வைக்கிறாள் என்பதிலேயே உள்ளது. அதனை ’36 வயதினிலே’ திரைப்படம் எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவால் நான் இன்று பெருமிதம் கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த நீங்கள் அனைவரும் மகளிர் மேம்பாட்டுக்கு வித்திட்டவர்களாக ஆனீர்கள். நிறைய வசந்திகள் தங்களது கனவுகளை நனவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment