Thursday, May 14, 2015


தொடர்ந்து 40க்கும் அதிகமான பேய்ப் படங்கள் வந்திருப்பதால், மாஸ் படத்தில் நடிக்க பயந்ததாக தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள பேய்ப்படம் ‘மாஸ்'. இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். வரும் 29ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் சூர்யா. அப்போது அவர் கூறியதாவது:-

நானும், வெங்கட் பிரபுவும் முன்பே இணைந்திருக்க வேண்டியது. தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. நாங்கள் சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரிவது என்று முடிவானதும், நிறைய பேர் நம்பவில்லை. நீங்கள் இருவரும் இணைந்து பணிபுரிவது உண்மையா? என்று என்னிடம் பலர் கேட்டார்கள்.

‘மாஸ்,' குழந்தைகளுக்கு பிடிக்கும். பெரியவர்களுக்கும் பிடிக்கும். பெரியவர்கள் சம்பந்தப்பட்ட படம் என்றாலும், குழந்தைகளுக்கும் புரிய வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கினோம்.

பேய் சம்பந்தப்பட்ட கதையாக இருப்பதால், முதலில் கொஞ்சம் பயந்தேன். வரிசையாக 40 பேய் படங்கள் வந்திருக்கிறதே... இது சரி வருமா? என்று தயங்கினேன்.

ஆனால், ‘மாஸ்' வெறும் பயமுறுத்தும் படமாக அமையவில்லை. அதையும் தாண்டி ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. நயன்தாரா, ப்ரணிதா, சமுத்திரக்கனி, பார்த்திபன் என எல்லோரும் தங்களால் முடிந்த அளவுக்கு பெரிய மனதுடன் தங்களின் திறமையை பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

வெங்கட் பிரபு பற்றி என் தம்பி கார்த்தி நிறைய சொல்லியிருக்கிறான். ‘‘வெங்கட் பிரபு பிரமாதமாக நடித்துக் காட்டுவார். நீ எதுவுமே செய்ய வேண்டாம். அவர் நடிக்கிறபடி நடித்தால் போதும்'' என்று கூறியிருக்கிறான். ‘மாஸ்,' எங்கள் இருவருக்கும் வேறு ஒரு பரிமாணமாக இருக்கும்.

இந்த படத்தில், உடல் எடையை கூட்டி குறைப்பது போல் காட்சி இருக்கிறதா? என்று என்னிடம் கேட்கிறார்கள். கதைக்கு தேவையில்லாமல், உடலை வருத்திக் கொள்ள அவசியம் இல்லை. படத்துக்கு படம் சட்டையை கழற்றிக் கொண்டிருக்க தேவையில்லை.

படத்தில், என் கதாபாத்திரத்தின் பெயர், மாசிலாமணி. அதன் சுருக்கமாக படத்துக்கு, ‘மாஸ்' என்று பெயர் சூட்டியிருக்கிறோம்' என இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment