விஜய்க்கு 'புலி' பரிசளித்த சூர்யா
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் ராதாபாரதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'நண்பர்கள் நற்பணி மன்றம்'. இந்த படத்தில் புதுமுக நாயகன் செங்குட்டுவன் நடிக்க அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி அக்ஷயா நடித்துள்ளார். நட்பு கலந்த காதல் படமாக அமைந்துள்ள இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.டி.செல்வகுமார் இந்த விழாவில் பேசும்போது, 'விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கி வரும் படத்திற்காக மொத்தம் பத்து டைட்டில்களை நாங்கள் பரிசீலனையில் வைத்திருந்தோம். அதில் விஜய் 'புலி' என்ற டைட்டில் இந்த படத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என தேர்வு செய்தார். ஆனால் 'புலி' படத்தின் டைட்டிலை எஸ்.ஜே.சூர்யா, கடந்த பல வருடங்களுக்கு முன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருந்தோடு, அந்த டைட்டிலை அவ்வப்போது புதுப்பித்தும் வந்துள்ளார்.
நாங்கள் சூர்யாவை அணுகி அந்த டைட்டிலை விஜய் படத்திற்காக தருமாறு கேட்டுக்கொண்டவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உடனடியாக 'புலி' டைட்டிலை எங்களுக்கு விட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அந்த டைட்டிலுக்கு நாங்கள் பணம் கொடுக்க முன்வந்தபோது, அந்த பணத்தையும் அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். எனவே இளையதளபதி விஜய்க்கு சூர்யா கொடுத்த பரிசாகவே இந்த டைட்டிலை நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு பி.டி.செல்வகுமார் இந்த விழாவில் பேசினார்.

0 comments:
Post a Comment